This entry is in the series 20040205_Issue

புதியமாதவி


==================

காதலா..
நீ என்னை அணைக்கும்போது
என்
கண்கள் மூடிவிடும்

காதலா..
நீ என் கதவுகளைத் தட்டும்போது
என்
கோலங்கள் அழிந்துவிடும்

காதலா..
நீ என்னைத் தொடும்போது
என்
உயிர்ப்பறவைப் பறந்துவிடும்

ஆயிரமாயிரம் தேவர்கள்
முக்கடவுள்கள்
வேத முனிகள்
வித்தகர்கள்
சரித்திர புருஷர்கள்
சாணக்கிய வித்துக்கள்
கவிஞர்கள்
..
இவர்களின்
சந்திப்பில் எல்லாம்
பிறக்காதக் காதல்..
எம பாதகா..
உன்னைச் சந்திக்காமலேயே
ஏன் பிறந்ததடா ?
எப்படி வளர்ந்ததடா ?

உன்னைப்
பார்க்க வேண்டும்
இப்போதல்ல.
உன் குரல்
கேட்க வேண்டும்
இன்றைக்கல்ல.
உன்னைத்
தீண்ட வேண்டும்
இரவிலல்ல

எம ராசானே
உயிர்க்காற்று
கண்ணிமைகளை
மூடவரும்
சொற்ப நேரத்தில்
நம் சந்திப்பு
சருகுகளின்
தோட்டத்தில்
விறகுகளில்
பூத்த
நெருப்புமாலையுடன்
நான்.
இது..
நம் சந்திப்பு
நிச்சயிக்கப்பட்ட
நம் சந்திப்பு.

———————————

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation