This entry is in the series 20051209_Issue

வைகைச் செல்வி


அடுக்கு மாடிகளில்
சொர்க்கத்தைத் தவிர
எல்லா மாடிக்கும்
ஏற்றிச் செல்லும்
ஏழை-பணக்காரன்
என்றேதும் பாராமல்
கூப்பிட்ட குரலுக்குச்
சேவகனாய் ஓடிவரும்
ஒற்றைப் பனைமரமாய்
அதிகாரிகள்
பேச்சுகள்…கோப்புகள்
மற்றும்.. . .பணியாளர்.
காரியம் முடிக்கவரும்
‘கனத்த ‘ பைகளையும்
அப்பாவி மக்களின்
வெற்றுக்கை மனுக்களையும்
சமமாய்ச் சுமந்துவரும்
அலுவலக மாடிக்கு.

தடங்கல் ஏற்படினும்
துாக்கி எறியாது.
ஒரு மூட்டை ஆண்களும்
இடிதாங்கிப் பெண்களுமாய்
எத்தனை பேர் வந்தாலும்
பத்திரமாய்ச் சுமந்து வரும்
கண்ணாடிச் சுவர்களும்
கம்பிச் சட்டமெனில்
உள்ளுலகம் காட்டும்.

மூடிய கதவிற்குள்
என்றென்றும் ஆட்கள்தான்.
இருந்தும்-
என்றோ ஒரு நாள்
கிளிகள் சிக்கிவிட்டால். . .
வேரின்றிக் கனிசுவைக்க
வேறெதையோ சுமந்து வரும்.
—-
vaigai_anne@yahoo.com

Series Navigation