திலகபாமா

இடறி விழுந்தேன் நீருக்குள்
துள்ளும் விறால் ஒன்றென் வாய்க்குள்
இழுத்து வந்தேனென் வாழ்வுக்குள்
சுவாசம் திணறும் மூச்சு
முகத்தில் அடிக்கும் மீன்வால் வீச்சு
மீன்வாசமடிக்கும் கவிச்சல்
இருந்தும் இழுத்து வந்தேனென் வாழ்வுக்குள்
துள்ளும் விறால் ஒன்றென்வாய்க்குள்
மீனின் வாய்க்குள்
மின்னும் மோதிரமிருந்தால்
சுற்றி இருக்கும்
துஸ்யந்த சமூகம் எனை
சகுந்தலையாய் நினைவு கொள்ளலாம்
சாபத்தால்
சகுந்தலை மறந்தாய்
கணையாழியால்
கண்டு கொண்டாய்
சகுந்தலை உனை மறந்திருந்தால்
சாத்தியமா நினைவு படுத்தல் ?
கண்களை ,காதலை மறந்து
கணையாழியால்நினைவு பெறும்
துஸ்யந்தனே
சகுந்தலை உனை மறக்க
சாபத்தை வரமாய் வேண்டியபடி