This entry is in the series 20031113_Issue

‘செங்காளி ‘


என்னை ஏழையென்று சொன்னார்கள்..

உனக்கென்று பெரிய வீடுண்டா என்று கேட்டார்,
பெரியதா ? சிறியதே இல்லை என்றேன்.
அப்படியானால், நீ ஏழையென்றார்.

தோட்டம் துரவு ஏதுமுண்டா என்று கேட்டார்,
தோட்டமா, கேட்டதே இல்லை என்றேன்.
அப்படியானால், நீ ஏழைதானென்றார்

நகை நட்டு உள்ளதா என்று கேட்டார்,
நகையா, நகைப்புத்தான் வருகிறதென்றேன்.
அப்படியானால், நீ ஏழையேதானென்றார்.

வங்கியில் உள்ளதா பணம் என்று கேட்டார்,
எங்கேயும் எதுவுமில்லை என்றேன்.
அப்படியானால், நீ ஏழையினும் ஏழையென்றார்.

பண்பான மனைவியுண்டு,
அன்பான மக்களுண்டு,
தோள்கொடுக்கும் நண்பருண்டு,
இவர்களெல்லாம் எனக்குச் சொந்தம்.
எப்படி நான் ஏழையாவேன் ?

நல்ல பார்வையுண்டு, செவிகளுண்டு,
நன்கு பேசும் திறமையுண்டு,
நோயற்ற உடம்புண்டு,
இவையெல்லாம் இருக்கையிலே
எப்படி நான் ஏழையாவேன் ?

மற்றவர்மேல் அன்புண்டு,
எதையும் சாதிக்கும் துணிவுண்டு,
இறைவன்மேல் அளவற்ற பக்தியுண்டு.
இத்தனையும் இருக்கையிலே
எப்படி நான் ஏழையாவேன் ?

பாவம், எழையென்றால் என்னவென்று
தெரியாமல் சொல்லிவிட்டார்,
நானா ஏழை, இல்லவே இல்லை.
இவர் வகைப்படி நான் ஏழையென்றால்
அதைப்பற்றி எனக்குக் கவலையுமில்லை.

————-

natesasabapathy@yahoo.com

Series Navigation