This entry is in the series 20040603_Issue

சாந்தி மனோகரன்


கிரஹம்பெல் எங்கள் ஊருக்குள்
இதுவரை வராததால்- பணி நிமித்தம்
வெளியூர் செல்லும் அப்பா..அவ்வப்போது
அம்மாவிற்கு கடிதம் எழுதுவார்…

அப்பாவிடமிருந்து வந்த கடிதமொன்றை
அம்மாவின் ஒப்புதல் பேரில் வாசிக்கலானேன்..
‘அன்புள்ள மனைவிக்கு ‘-என
சத்தமிட்டு வாசித்து
அம்மாவின் முகம் வாசித்தபோது
வெட்கத்தில் அம்மா சிவந்திருந்தாள்…

பெண்களின் வெட்கமும்
வெட்கத்தில் பெண்களும் கூடுதல் அழகென்பதை
அவளிடமிருந்துதான் நான் அறிந்துகொண்டேன்…

பின்னொரு நாளில் அம்மாவிடம் கேட்டேன்
அவளுக்குப்பிடித்த காதல்வரிகள் எதுவென்று… ?!
அப்பாவின் கடித ஆரம்பவரிகளை ஒப்பித்தாள்…
நாணம் தப்பாமல்…

அம்மா-அப்பா…, நல்ல
கணவன்-மனைவி..!-அழகான
காதலன்-காதலி.. ?!
கணவன் மனைவியாகிய அம்மாவும் அப்பாவும்
அழகான காதலர்களா.. ?!.. தெரியாது
அவர்களிடையேயான காதல் தெரிந்தது போல…
– shanthi_yem@yahoo.com

Series Navigation