திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

முன்னேற்றம்

This entry is in the series 20110227_Issue

அமைதிச்சாரல்


..

திட்டமிடப்படாமலும்
எல்லாம்
நடக்கிறதெனினும்;
தற்செயலாகவும்
மாற்றங்களெதுவும் நிகழ்ந்திடுவதில்லை..
எவருக்காகவும்
எப்பொழுதும்
காத்துக்கொண்டிருக்காத.. காலம்.
இலையுதிர்காலத்து மரமென
வாய்ப்புகளை உதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

சேமிக்கப்பட்ட கனவுகள் ஒவ்வொன்றும்,
நெஞ்சக்கனலின் தணியாவெப்பத்தில்
வளர்சிதையுமுன்
பத்திரமாய் அடைகாக்கப்பட்டிருக்க..
காற்று நகர்த்திச்சென்று சேர்க்கிறது
ஒவ்வொரு இலையாக..

சருகாகவிட்டு சோம்பிக்கிடக்கின்றன
தலைவிதியென்றும்
தலையெழுத்தென்றும்
தன்னைத்தானே நொந்துகொண்ட
கிணற்றுத்தவளைகள்..
கனவுகள் காலாவதியாகுமுன்
உதறியெறிந்த வாய்ப்புகளை
மீண்டும் கண்டடையத்தெரிந்தவை மட்டுமே
மீண்டு கரைசேர்கின்றன..

ஆசைக்கும் அறிவுக்குமான போட்டிக்களத்தில்
வாய்ப்புகள் ஜெயித்துவிட
விருப்பங்கள் இல்லாமலேயே
மாற்றி நடப்பட்டாலும்..
பெருங்கடலாயினும், குடுவையாயினும்
தனக்கென்றோர் சாம்ராஜ்யத்தில் பரிமளிக்கின்றன..
நீந்தக்கற்றுக்கொண்ட மீன்கள்.

Series Navigation

About அமைதிச்சாரல்

அமைதிச்சாரல்

View all 9 articles →

முன்னேற்றம்

This entry is in the series 20040812_Issue

ந.வீ.விசயபாரதி


வளர்ந்த நாடுகளால்
அடையப் பெற்றுவிட்ட
அட்சயப் பாத்திரம்…
வளரும் நாடுகளுக்கு
அமையப்பெற்றும் இது
அலுமினியப் பாத்திரமாகவே இருக்க,
வறிய நாடுகளுக்கோ
கனவில் கூட
கைகளில் ஏந்தப்படுகிற
பிச்சைப் பாத்திரமாகவே..
முன்னேற்றம் !

அட்சயப் பாத்திரக் காரர்கள்
அள்ளிக் கொடுக்கும் போதே
ஆயுத ஒப்பந்தமும் செய்து
அண்டை நாடுகளையெல்லாம்
சண்டை நாடுகளாக்கி
கொம்புசீவி விடுவதால்
வளரும் நாடுகளுக்கும்
வறிய நாடுகளுக்கும்
கண்ணுக்கு மட்டுமே தெரிகிற
கைகளுக்கு என்றுமே எட்டாத
கானல் நீராகவே
முன்னேற்றம் !!

– ந.வீ.விசயபாரதி, சிங்கப்பூர் –
chennai1980@yahoo.com

Series Navigation

About ந.வீ.விசயபாரதி

ந.வீ.விசயபாரதி

View all 3 articles →